Thursday, May 26, 2005

மறைத்தல், திரித்தல், பொய் பேசுதல்

கருப்பண்ணசாமியின் வரவால் நேசகுமாருக்கு 'கருப்பாவேசம்' வந்து மயிலாடுதுறை சிவாவின் 'இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா' என்ற பதிவில் வதவத (நன்றி ஆரோக்கியம்) என்று எனக்கு பதில் எழுதிவிட்டார். மூன்று மாத காலமாக இந்த கருப்பண்ணசாமி எங்கே போயிருந்தார்?

ஆக நான் கண்ணியமாகவும், மரியாதையாகவும் கேட்ட கேள்விகளுக்கு சரக்கில்லை என்பதால் பதில் இல்லை. கேட்டால், இன்னும் படிக்கவில்லை, யாராவது படித்து அதிலிருந்து ஒன்றிரண்டு முக்கியமானதை எடுத்துச் சொன்னால் பதில் சொல்கிறேன், பதில் சொல்வேணா என்று தெரியவில்லை என்று சமாளிப்புகள், தடுமாற்றங்கள் முடிவில் தலைமறைவு. வார்த்தை விளையாடல்கள் செய்து, ஒன்றை இரண்டாக்கி அல்லது ஒன்றுமே இல்லாததாக்கி எழுத சந்தர்ப்பம் கிடைத்தால் வதவத பதில்கள் வந்துவிடும்.

இரண்டில் இரண்டைக் கூட்டினால் நாலு வரும் என்று சொல்லத் தெரியாதவன், அல்ஜிப்ரா கணக்கு சொல்லிக் கொடுக்க மீசையை முறுக்கிக் கொண்டு வந்த கதையாய், சாதராணமாக நேசகுமார் எழுதியதிலிருந்தே கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் தற்போது தான் கண்ணியம் காத்ததாக கதை எழுதுகிறார். உலகில் கோடான கோடி மக்கள், முஸ்லீம் முஸ்லீமல்லாதவர் என்ற பாகுபாடில்லாமல் போற்றும் நபிகள் நாயகம் அவர்களை, இவர் இகழ்ந்து பேசும் போது எங்கே அய்யா உங்கள் கண்ணியம் காணமல் போனது? அடுத்தவர்களுக்கு கண்ணியம் கொடுத்துப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள், உங்களின் கண்ணியம் பாதுகாக்கப்படும் என்ற பொதுவான சாதாரண உண்மை உங்களுக்கு தெரியாமல் போனதேன்.

பொய் பேசுவது யார்?
எதைப் பொய் என்கிறீர்கள் அப்துல்லாஹ்? திருக்குர்ஆன் பொய் என்கிறீர்களா? இப்மு சஅது யூதர் என்கிறீர்களா? ஸஹி முஸ்லிம் இஸ்லாத்தின் எதிரி என்கிறீர்களா? அல்லது நபிகளார் பொய்யும் புரட்டுமாய் தனக்கு வசதிப்பட்டவாறு எதையெதையோ பேசிவிட்டுப் போனார் என்கிறீர்களா?

நீங்கள் பேசுவதுதான் பொய். எனது 'நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்' என்ற பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இல்லை, நான் பொய் சொல்லவில்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள் நேசகுமார் அவர்களே? நீங்கள் பேசுவது உண்மைதான் என்று நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுக்கும் போது ஏன் உதறிவிட்டு போகிறீர்கள்? இதைத்தான் திராணியில்லை என்று உலகத்தார் சொல்வது, உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை உங்களுக்குப் புரியும் என்று நான் நினைப்பது தவறோ என்னவோ தெரியவில்லை.

மனைவியிடம் காமத்தை அடக்க முடியாதவர் வழி காட்டியா?
நான் கேட்கிறேன், மனைவியிடம் ஏன் ஒருவர் காமத்தை அடக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை, விளக்கம் கொடுங்கள் நேசகுமார் அவர்களே! மனைவியிடம் காமத்தை அடக்கிக் கொண்டு, மற்ற பெண்களிடம் செல்பவர்களைத்தான் முற்றும் துறந்த முனிவர்கள் என்று ஏற்றுக் கொள்வீர்களோ? அப்படிப் பட்டவர்களின் வழிகாட்டுதலைத்தான் ஏற்றுக் கொள்வீர்களோ? கணவன் மனைவிகள் ஜாக்கிரதை! காமத்தை மனைவியிடம் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்று நேசகுமார் அவர்கள் புது விதி செய்து புரட்சி செய்ய இருக்கிறார். மனைவி இருப்பவர்கள் எல்லாம் இனி காமத்தை அடக்கி மோட்சம் பெறும் வழியை நேசகுமார் அவர்கள் சொல்லித் தருவார்! மனைவியிடம் தனது இச்சைகளை, உடல் பசியை தீர்த்துக் கொள்பவர்களின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் எல்லாம் இனி ஏற்றுக் கொள்ள அறுகதை அற்றவை என்று நேசகுமார் ஆலோசனை வழங்க வந்துவிட்டார்.

'சஹி முஸ்லிம், யாரோ ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து உணர்ச்சி வயப்பட்ட முகமது நபியவர்கள் வேலை செய்து கொண்டிருந்த ஜைனப் அவர்களை இழுத்து உடலுறவு கொண்டார்'

இது நேசகுமாரின் கூற்று.

இந்த செய்தி இங்கே அரை குறையாக நேசகுமாரால் சொல்லப்பட்டுள்ளது, இதற்கு பெயர்தான் 'மறைத்தல்' என்று பெயர். முழு செய்தியையும் சொல்லாமால் தனது வசதிக்கேற்றவாறு அதை கொச்சைப்படுத்திச் சொல்வதற்கு பெயர்தான் 'திரித்தல்'. இந்த இரண்டையும் செய்யும் மனிதர்களுக்குப் பெயர்தான் 'பொய்யர்'.

இங்கே குறிப்பிடப்படும் ஜைனப் என்பவர் யார்? நபிகாளாரின் மனைவி. இந்த செய்தியை சொன்னவர் யார்? நபிகள் நாயகம் அவர்கள். ஏன் சொல்கிறார்? காமப்பசி ஏற்படுபவர்கள், இவ்வாறு உணர்ச்சிவசப்படுபவர்கள், அதை தனது மனைவியிடம் மட்டுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினைக்காகத்தான் அவ்வாறு அறிவிக்கின்றார். அதைத்தான் அந்த செய்தியின் முடிவில் இருக்கிறது. ஏன் இவ்வாறு சொல்லப்பட்டது? அந்த காலக் கட்டங்களில் உடலுறவு ஒழுக்கமற்ற, உணர்ச்சிகளுக்கு உந்துதலாகி தனக்கு சொந்தமில்லாத பெண்களிடம் உடலுறவு கொள்வது வழக்கமாக இருந்தது. அதை முஸ்லீம்கள் செய்யக் கூடாது என்பதுதான் இதிலிருந்து அன்றைக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பாடம். இதை புரிந்துக் கொள்ள இயலாதவர்கள்தான் இதைக் கொச்சைப் படுத்தி இன்றைய கால மன நிலையுடன் ஒப்பிட்டு விளக்கம் தேட முற்படுகின்றனர்.

இப்படி அநாகரீகப்படுத்தி பேச சந்தர்ப்பம் கிடைத்தால் கருப்பண்ணசாமியின் தயவில் நேசகுமார் வதவத என எழுதிவிடுவார். ஆனால் அறிவுப்பூர்வமான ஆழமான விவாதங்கள் என்று வந்தால் என்னவோ இவருக்கு மட்டும்தான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்பது போல் அலுத்துக் கொள்வார்.

இந்த செய்தியைப் பற்றிய விவாதத்தில் இருக்கும் போது மனைவியின் அனுமதியின்றி உடலுறவு கொள்வது தவறு, அது அவளுடைய உரிமையை மதிக்காதது என்றெல்லாம் இச்செய்திக்கு சம்பந்தமில்லாத விவாதங்கள் செய்யப்பட்டன. முதலாவதாக இங்கே 'அனுமதி இல்லாமல்' என்ற வார்த்தையே இல்லை. இரண்டாவதாக உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள்? அப்படி செய்வதற்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?

எங்கிருந்து வந்தார் இல்லாத மருமகள்?
நபிகளாரின் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள் அல்லது பதியப்படாத செய்திகள் என்ற ஒன்றும் இல்லை. நபிகாளாருக்கு பிறந்த ஆண் குழந்தைகள் எல்லோரும் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைந்துவிட்டார்கள் என்றுதான் வரலாற்று குறிப்புகளும், ஆவணங்களும் தெரிவிக்கின்றன? அப்படியிருக்கும் போது எங்கிருந்து வந்தார் இந்த இல்லாத மருமகள்? இதற்கு பெயர்தான் 'திரித்தல்' நேசகுமார் அவர்களே.

பதில் தாருங்கள். காத்திருக்கிறேன்.

கஃபாவில் ஏன் முஸ்லீம்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்?
பொதுவாக அனுமதி என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரியும். மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட எல்லைகளுக்குக் கூட வரையறைகள், விதிமுறைகள் இருக்கும் போது இறைவனால் அங்கீகரிக்கப் பட்ட ஆலயமாக உலகத்தாருக்கு அறிவிக்கப்பட்ட மக்காவிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றது. அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால் கஃபாவில் நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. எப்படி அமெரிக்காவிற்கு செல்ல வேண்டுமென்றால் விசா வாங்க வேண்டும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு நேர வகையில் நடந்து கொள்வேன், அந்த நாட்டின் சட்டங்களை மதிப்பேன் என்றெல்லாம் உறுதி மொழி அளிக்க வேண்டுமோ அதே போன்று இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட கஃபாவிற்கு வருவதற்கு அந்த இறைவனிடம் உறுதி மொழி அளிக்க வேண்டும், அந்த உறுதிமொழிதான் ஏக இறைவனை ஏற்றுக் கொள்வதும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்வது. இதை உளமாறச் சொல்லிவிட்டு நேசகுமார் அவர்களும் செல்லலாம், அவரை புலிப் பாண்டியும் தொடரலாம்.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப்பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் வசனம் 9:28)

இந்த மேற்கண்ட வசனம், இணை வைத்து வணங்குபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கின்றது. இறைவனுக்கு இணை வைக்காமல், முஹம்மதை நபி என்று ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக செல்லலாம். இந்த வசனங்களில், கீழ் சாதி, சானாதனி என்ற பாகுபாடுகளெல்லாம் எங்கிருந்து வந்தது. நேசகுமாருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் சனாதனியாக, மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் அந்த இறைவனை, சிலைகளை இன்னும் என்னென்ன மாரியாதைக்கு உரியவைகளாக அவர்கள் கருதுகிறார்களோ அவை அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள்தான், அவர்களுக்குள் வணங்குவதில் வேறுபாடு இல்லை, ஆனால் வெறுபாடுகள் பிறப்பினால்தான். விஷ்ணுவை மேல்சாதிக்காரணும் வணங்கலாம், கீழ்சாதிக் காரணும், ஆனால் கர்ப்பகிருகத்தில் செல்ல அனுமதி மேல் சாதிக்காரர்களுக்கு மட்டுமே.

ஆனால் இந்த இறை வசனத்தில் இணை வைப்பவர்களைத்தான் அசுத்தமானவர்கள் என்று சொல்கிறது. அது மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் சரி.

இந்த வசனத்திற்கும், நேசகுமாரின் கீழ்சாதி விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இதைத்தான் 'திரித்தல்' என்று சொல்வது.

கஃபாவின் கஸ்டோடியனுக்கு மிகுந்த மரியாதை
அது என்ன மிகுந்த மரியாதை? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன். நாங்களும் புரிந்துக் கொள்கிறோம். இப்படி இல்லாததை சொல்வதற்கு பெயர்தான் பொய் பேசுதல் என்று பெயர்.

என்னவோ உலகத்திற்கு தெரியாத ஒரு விஷயத்தைச் சொன்னதுபோல் நேசகுமாரின் இந்த கண்டுபிடிப்புக்கு புலிப்பாண்டியின் ஜால்ரா? முடிந்தால் புலிப்பாண்டிக்கூட சொல்லலாம் அது என்ன பொல்லாத மரியாதை என்று, நாங்களும் தெரிந்துக் கொள்ளலாம்.

அஹமதியாக்கள்
அஹமதியாக்களைப் பற்றி ஏற்கனவே நேசகுமார் வேறு சில தளங்களில் எழுதிய திரித்தல் மறைத்தல் வேலைகளை படித்துதான் இருக்கிறேன். ஒன்று செய்வோமா நேசகுமார் அய்யா? எனது பழைய கேள்விகளுக்கு விரைவில் பதில் சொல்லுங்கள், பிறகு இந்த அஹமதியாக்களைப் பற்றி நாம் ஒரு சிறப்பான விவாதத்தைத் தொடங்கலாம்.

கஃபா உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம்
சரிதான். யார் இல்லை என்றது. அல்லாஹ்வின் அறிவிப்பின்படி கஃபா என்பது உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம். இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதே இறைவன் அதே திருக்குர்ஆனில் சொன்ன முஹம்மது நபி உங்களுக்கோர் ஒரு அழகிய முன் மாதிரி என்ற எடுத்துக்காட்டை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? ஒன்றை ஏற்றுக் கொண்டு, இன்னொன்றை மறுப்பதென்பது, யூதர்களின் வழியாக இருந்தது. அவர்கள் இவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அதையேதான் நீங்களும் சொல்கிறீர்கள். தனது மனதின் விருப்பு வெறுப்பிற்கேற்ப ஏற்பதும் மறுப்பதும் நியதி அல்ல, அது நம்பிக்கையும் அல்ல.

நேசகுமாரின் திருக்குர்ஆன் விளக்கங்களைப் பார்க்கும்போது அது அவருடைய புரிந்துக் கொள்ளும் கடினத்தையும் மற்றும் வேண்டுமென்றே கையாளப்படும் வன்முறை வாதமாகத்தான் தெரிகிறது.

ஒன்றை நேசகுமாரும், மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வாழ்வின் பெரும்பாண்மையான இடற்பாடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைத்தான் சொல்கிறது. அதே நேரம் அதன் தீர்வுகள் இன்றைக்கு கடினமாகவோ அல்லது அறிவிற்கு ஏற்றுக் கொள்ள முடியாததகவோ இருந்தாலும் அது பிரிதொரு (எதிர்) காலத்தில் அவசியமாக இருக்கும். அதனால்தான் அது எக்காலத்திற்கும் ஏற்ற மறையாக இருக்கிறது. திருக்குர்ஆன் அனுமதிப்பதை கட்டளையாக அர்த்தம் செய்து கொண்டு அதற்கு விளக்கமளித்து வில்லங்கம் செய்யும் நேசகுமார் இதைத் தெரிந்தே செய்கிறார் எனும்போது அவரை "பொய்யர்" என்று சொல்லுவதில் என்ன தவறு?.

Sunday, May 15, 2005

ஆரோக்கியமான விவாதம்

நண்பர் ஆரோக்கியம் எனது வலைப்பதிவில் பின்னூட்டத்தின் மூலமாக 'நான் விவாதத்திற்கு தயார்' என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேற உரிமையில்லை, அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையே என்றும் அது தொடர்பாக தனது பதிவிலே ஒரு சில விளக்கங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அவரது இந்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கு முன்னர் ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

'முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள்' என்ற தீர்மானத்துடன் விவாதம் செய்ய வருகிறாரா? அல்லது இஸ்லாம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று விவாதம் செய்ய வருகிறாரா? திறந்த மனதுடன் விவாதம் செய்தால் அது ஆரோக்கியமான விவாதமாக இருக்கும், இல்லையென்றால் நேசகுமார் அவர்கள் செய்வதுபோல் அது ஒரு 'எழுத்து தீவிரவாதமாகத்தான்' அமையுமே ஒழிய 'கருத்து மோதலாக' இருக்காது. ஆம், கண்டதையும் கேட்டதையும் வைத்து, கதை எழுதி அங்கங்கே வினாக்களையும் விமர்சனங்களையும் எழுப்பிவிட்டு அதற்கான விளக்கங்களையோ அல்லது விடைகளையோ படிக்க மாட்டேன் என்று எழுதுவதற்கு 'எழுத்து தீவிரவாதம்' என்றுதான் பெயர்.

இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் செய்வோரில் பெரும்பாலோர், இஸ்லாத்திற்கெதிரான வெப்சைட்டுகளிலும், புத்தகங்களிலும் உள்ளதைப் படித்துவிட்டு, அதில் தனக்கு சாதகமான கருத்துள்ள விமர்சனங்களாக இருந்தால் அதை எடுத்து ஆஹா ஓஹோ என்று அலங்காரப் படுத்தி எழுதுவதே இயல்பு. ஆரோக்கியம் அவர்களும் அப்படியா?

அப்படித்தான் என்றால் இங்கொன்றும் அங்கொன்றுமாக விவாதம் செய்து பலனில்லை.

ஆரோக்கியத்தின் வினாக்களிலிருந்தே விவாதம் தொடங்கலாமா? சரி என்றால் எனது வினாக்களுக்கு முதலில் அவர் விடையளிக்கட்டும், பிறகு முஸ்லீம்களுக்கு மதம் மாற உரிமையிருக்கிறதா என்ற கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்.

எனது கேள்வி (1) இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது? ஏன் அது சிறந்த மதமாக போற்றப்படுகிறது?

நன்றிகள்.

Thursday, May 05, 2005

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் [பாகம் 2]

நேசகுமாரிடம் நான் அவர் எழுதியதிலிருந்து இரண்டு கேள்விகளும் அதற்கான விளக்கமும், ஆதாரமும் கேட்டிருந்தேன். அதற்கு இன்றுவரை பதிலில்லை. அத்தனை சீக்கிரம் பதில் வராது என்று தெரிந்திருந்துதான் கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் இந்த பக்கமே வராமல் சொந்த வேலைகளில் கவனமாக இருந்தேன். உடனே பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் அவர் உண்மையிலேயே இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை செய்துவருகிறார் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ளலாம். அவர் செய்து வருவதெல்லாம் வெறும் அவதூறு பிரச்சாரங்கள் மட்டுமே. அதையும் ஒழுங்காக செய்கிறாரா என்றால் அதிலும் குறைபாடு. காரணம் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு வேண்டுமென்றே ஒரு தவறை எத்தனை காலம்தான் செய்யமுடியும். அவரும் மனிதர்தானே, அதனால அவருக்குள்ளேயே முன்னுக்கு பின் முரன்பாடுகளும், குழப்பங்களும், தடுமாற்றமும். நடக்கட்டும்.

இடைப்பட்ட காலத்தில் அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் என்று வழக்கம்போல் புலம்பல்கள். வெறும் புலம்பல்கள்தானே இதற்கு ஏன் பதிலும் விளக்கமும் என்று ஒரு சிலர் கேட்கலாம். பொது இடங்களில் ஒரு மனிதர் அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ இன்னும் பைத்தியக்காரன் போல் போவோர் வருவோர் மேல் எல்லாம் சேற்றை வாரி அடித்துக் கொண்டிருந்தால் அதை நடக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா? அது போன்றுதான் இந்த பதில்களும் அவ்வப்போது அவசியமாகிறது.

இதில் வித்தியாசம் என்னவென்றால் அவர் சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். நான் அப்படித்தான் சேறுகளையும் சாக்கடைகளையும் அள்ளித் தெளிப்பேன், சொரணையும் புத்தியும் இருந்தால் துடைத்துக் கொண்டு செல்லட்டும், இல்லையென்றால் சுமந்துக் கொண்டுதான் செல்லட்டுமே என்று சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். தொடரட்டும்.

'தெருவில் நடைபாதையில் கிடக்கும் முட்களை ஓரமாக எடுத்தெரிவதும்' இறைவழிபாடுதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கிணங்க அறிவுப்பாதையின் நடுவிலே வேண்டுமென்றே நேசகுமார் போன்றவர்களால் எடுத்தெரியப்படும் அறிவுக்கு சம்பந்தமில்லா விஷயங்களை களைவதும் இறைவழிபாடுதான். இப்படி ஒரு வழிபாட்டை செய்வதற்கு வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

'நபிகளார் கடவுளைவிட அதிகாரம் நிறைந்தவராக கற்பிதம் செய்யப்படுகின்றன' என்று நபிகளாரை பிரதம மந்திரி போன்றும் கடவுளை ஜனாதிபதி போன்றெல்லாம் இவர் கற்பிதம் செய்து கதை எழுதியிருக்கிறார். வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறார். கண்டதையும் கேட்டதையும் வழிபாடு செய்து, கடவுளாக்கி, காணிக்கை செலுத்திவாழும் வழக்கத்தை கொண்டவர்களுக்குத்தான் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாது.

மாமனிதர் என்ற தலைப்பிலே அபூ உமர் அவர்கள் எழுதியதை நேசகுமாரும் அவருடைய எழுத்தை ஆராதிப்பவர்களும் கொஞ்சம் படித்துப் பார்த்தால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை புரிந்துக் கொள்ளமுடியும்.

'தம்மை உண்மையாக விசுவாசித்தவர்களுக்கும், தமது மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் சிபாரிசு செய்வார்' என்று எழுதிவிட்டு, கடத்தல்காரர்களுக்கும், குழந்தைகளை கொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும், மாற்றுமதப் பெண்களை கற்பழிப்பு செய்பவர்களுக்கும் பரிந்துரைப்பார்' என்று விஷம் பூசிய எழுத்துக்களை எழுதியிருந்தார். இவரை நினைத்து பரிதாபப்படுவதை தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்?

'அல்லாஹ்வின் கருணையைக் கொண்டுதான் நபி அவர்களே, தானே சொர்க்கம் செல்லமுடியும்' என்று சொல்லியிருக்கும்போது எப்படி நபியவர்கள் கடவுளைவிட அதிகாரம் மிகுந்தவராக இருக்க முடியும். அவருடைய தோழர்கள் ஆச்சர்யத்துடன் 'யா ரசுலூல்லாஹ்.. உங்களுக்கே இந்த நிலைதானா? என்று கேட்கும்போது.. ஆமாம் என்று பதிலளித்தார்கள்.

வெறும் முஸ்லீமாகிவிட்டால், ஏக இறைவனை ஏற்றுக் கொண்டுவிட்டால் மட்டுமே ஒருவன் நபிகளாரின் சிபாரிசிற்கு ஆளாகிவிடமுடியும் என்று நினைப்பது எப்படியிருக்கிறதென்றால் ஒருவன் பிராமணனாக பிறந்துவிட்டால் அவன் எப்படி பிரம்மனுக்கு நெருங்கியவனாக கருதப்படுகிறானோ அப்படியிருக்கிறது. ஒரு மாணவன் எல்லா நாட்களிலும் பள்ளி சென்று வந்துவிட்டால் பாஸாகிவிடமுடியுமா? நேசகுமார் போன்ற ஆசிரியர்கள் இருந்தால் அதுகூட சாத்தியமானலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. படிக்க வேண்டாம், பரிட்சை எழுத வேண்டாம், பள்ளியையும் ஆசிரியரையும் நம்பி ஏற்றுக் கொண்டு தினமும் பள்ளிக்கூடம் சென்று வந்துவிட்டால் மட்டும் போதும், ஆசிரியர் சிபாரிசு செய்து பாஸாக்கிவிடுவார்.. என்னய்யா வியாக்கியானம் இது?

அரசியல் அச்சுறுத்தல்கள் முடிந்து இப்போது ஆன்மீக அச்சுறுத்தல்கள் என்று நேசகுமார் வளர்ச்சி அடைந்துள்ளார். அதாவது மற்ற மதங்களெல்லாம் நரக எச்சரிப்பை விட்டு வளர்ச்சி அடைந்துவிட்டனவாம், இஸ்லாம் மட்டும் இன்னும் கற்காலத்திலேயே இருந்துக் கொண்டு நரகம் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றனவாம். இந்து மதத்திலும் கிறிஸ்துவ மதத்திலும் இருக்கிற மதகுருமார்கள் எல்லோரும் கூடி நரகம் சம்பந்தப்பட்ட வேத வாக்கியங்களை எல்லாம் களைந்துவிட்டு இனி மக்களுக்கு அன்பை மட்டுமே போதிப்பதென்று முடிவெடுத்துவிட்டார்களோ?

'ஏனைய மதங்களெல்லாம் நரகக் கட்டங்களைவிட்டு நகர்ந்துவிட்டன' என்ற அரிய கண்டுபிடிப்பை எழுதியிருக்கிறார். ஏனைய மதங்களில் இருப்பவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், தீயதை ஒழிப்பவர்களாகவும், தியாகச் சிந்தனை கொண்டவர்களாகவும் மாறிவிட்டதால் மற்ற மதங்கள் எல்லாம் இனி நரகத்தைப் பற்றி பேசுவதில்லை என்று மாறிவிட்டனவோ? ஏன் இப்படி தடுமாறுகிறார் நேசகுமார். நரகத்தைவிட்டு தாண்டிவிட்டதனால்தானோ பெரியவாளும் சிறியவாளும் சேர்ந்து இப்படி காமக் கூத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

எல்லா மதத்திலும் எல்லா அயோக்கியர்களும் இருக்கிறார்கள். மதத்தின் பெயர் சொல்லி தன் சொந்த வயிற்றை நிரப்பும் மனிதர்கள் இருக்கிறார்கள் இதுதான் எதார்த்தம். எதார்த்தத்தை எழுதுவதாக வேறு ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். பெரும்பான்மையான முஸ்லீம்களைப் பற்றி எதார்த்தத்தை எழுதுவதாக எழுதியிருக்கிறார். முஸ்லீம்களும் தவறு செய்பவர்கள்தான், இதில் என்ன விந்தை. சின்ன சாமியார்களிடம் தொடங்கிய இந்த காமக் கலாச்சாரம் இப்போது பெரிய சாமியார் வரை வந்துவிட்டது, இது எதார்த்தம். இந்த எதார்த்தத்திற்க்காக இருக்கிற சாமியார் மடங்களை எல்லாம் இனி மூடிவிட வேண்டியதுதானே. மாறிவரும் இந்து வேதங்களிலிருந்து இனி சாமியார், சந்நியாசி போன்ற விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டால் இது போன்ற தவறுகள் இனி நடக்காதுதானே. எதார்த்தம் அய்யா.. கோபாப் படாதீர்கள்.

வழக்கம்போல் ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்று எந்தவிதமான உள்வாங்குதலையும், தான் எழுதியது என்னவென்று திருப்பிப் பார்க்காமலும் பல விஷயங்களை, தவறுகளை எழுதியிருக்கிறார். அதாவது நபிகள் நாயகம் அவர்கள் 'ஜிஸ்யா வரியாகவும் கொள்ளையிட்ட பணமாகவும் 10,000 திர்ஹம்' அரசு கஜானாவில் இருந்ததென்று எழுதி அதை வைத்துக் கொண்டு நபிகளின் வாரிசுகள் அனுபவித்தது போன்றும் எழுதியுள்ளார். இதற்கான விளக்கமும் ஆதாரமும் வேண்டும். (ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று எனது முந்தைய பதிவில் விளக்கியுள்ளேன்) அதாவது எங்கிருந்து இந்தப் பணத்தைக் கொள்ளையடித்து வந்தார்கள், நபிகளின் வாரிசுகள் யார் யார் இந்தப் பணத்தில் சொகுசாக வாழ்ந்தார்கள் என்ற விபரம் தரமுடியுமா?

இது மூன்றாவது கேள்வி.

அடுத்து ஒரு அட்டவணை தயார் செய்து பதிவில் வைக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு அட்டவணை எனது பதிவில் இருந்தால் அடுத்தமுறை நேசகுமாருக்கு அதைப் பார்த்து இன்னென்ன கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது என்று சாவகாசமாக பதிலளிக்கலாம் அல்லவா? காரணம் அவருக்கு அவதூறுகளை வீசி வீசி எதற்கு யார் விளக்கம் கொடுக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை, அதனால்தான் அபூ முஹை அவர்களின் கேள்விகளை வேறு ஒருவரிடம் (அனானிமஸ்) கேட்டுக் கொண்டிருக்கிறார்.

(ஒரு வேளை இப்படி அவருடைய பதிவில் அனானிமஸாக பதில் எழுதுவதும் அவரேதானோ? எதார்த்தமான சிந்தனை அய்யா.. எங்களுக்கெல்லாம் எதார்த்தமான சிந்தனை வரக்கூடாதா?)