Wednesday, June 01, 2005

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் (பாகம் 3)

அபூஸுஃப்யான் என்ற நபித்தோழருக்காக கண்ணீர் வடித்த நேசகுமார் வழக்கம் போல் யானையைத் தடவிப் பார்த்த குருடன் போல் இங்கொன்றும் அங்கொன்றும் படித்துவிட்டு அபு அபூஸுஃப்யானுக்காக அழுது வைத்தார். அபூஸுஃப்யானின் உண்மை வரலாறு நேசகுமாருக்குத் தெரியுமா?

வாளால் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்றும் அதற்கு நபித்தோழர் அபூஸுஃப்யான்(ரலி) அவர்களின் இஸ்லாத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் மறைத்தல் திரித்தல் செய்திருந்தார்.

அய்யா நேசகுமார், நீர் நடுநிலையில் நின்று அதை செய்தியாக எழுதி இருந்தீரென்றால் உங்களுக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறீர் என்று நினைக்கலாம். ஆனால் வேண்டுமென்றே, "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்" என்ற தலைப்பில் நயவஞ்சகத்தனமாய் எழுதுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். வரலாற்றை மாற்றி எழுதும் வேலையெல்லாம் வரலாறு தெரியாதவர்களிடம் வேண்டுமானால் செல்லுபடியாகலாம். இஸ்லாத்தைப் பொருத்தவரை, வரலாற்றுக் குறிப்புகள் நிறையவே தெளிவாக இருக்கின்றது.

விஷயத்திற்கு செல்வதற்கு முன்னால் ஒரு சம்பவத்தை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு வாக்கில் அபூஸுஃப்யான் உட்பட பல குறைஷிகள் வியாபார நிமித்தமாக சிரியா நாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது ஜெருசலம் அரண்மனைக்கு வந்திருந்த ரோமப் பேரரசர் கைஸர் என்ற ஹிர்கல், அந்த அரபு வியாபார கூட்டத்தை தன்னிடம் அழைத்துவரும்படி உத்திரவிட்டார்.

அங்கு மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துக்கொண்டு, குறைஷிகளே உங்கள் பகுதியில் இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மனிதரின் நெருங்கிய உறவினர் யாரேனும் உண்டா என்று கேட்கிறார். அதற்கு அபூஸுஃப்யான் நானே அவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார். (அபூஸுஃப்யான் அவர்கள் முஹம்மது நபியின் பெரிய தந்தையின் மகனாவார்).

அபூஸுஃப்யான் அவர்களையும் அவருடன் வந்திருப்பவர்களையும் தனக்கு முன்னால் நிறுத்துமாறு கட்டளையிட்ட மன்னர், தனது மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, "நான் அந்த மனிதரைப்பற்றி (முஹம்மது நபி) இவரிடம் (அபூஸுஃப்யான்) கேட்பேன். இவர் என்னிடம் பொய்யாக ஏதேனும் சொன்னால் மற்றவர்கள் உண்மை கூறிடவேண்டும். இதை அவர்களிடம் சொல்" என்றார்.

நான் பொய்யான தகவல்களை கூறியதாக என் வியாபாரக் குழுவினர்கள் கூறிவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லாதிருந்தால் இறைவன் மீது ஆணையாக! முஹம்மது நபியைப்பற்றி பொய்யான தகவல்களையே கூறியிருப்பேன்" என்று அபூஸுஃப்யான் கூறுகிறார். அதற்கு காரணம் அந்த காலக் கட்டத்தில் அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் ஹிர்கல் மன்னர் கேட்ட கேள்விகளும் அபூஸுஃப்யான் அவர்களின் பதில்களும் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னரின் கேள்வி: உங்களில் அவர்களுடைய பாரம்பரியம் எத்தகையது?

அபூஸுஃப்யான் அவர்களின் பதில்: அவர் எங்களில் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.

கேள்வி: இவருக்கு முன்னால் உங்களில் யாரேனும் எப்போதாவது (நான் இறைத்தூதர் என்ற) இந்த வாதத்தை செய்ததுண்டா?

பதில்: இல்லை

கேள்வி: இவரைப்பின்பற்றி செல்பவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா?, அல்லது சாமானியர்களாக இருக்கிறார்களா?

பதில்: சாமானியர்கள்தான் அவரை பின்பற்றிச் செல்கின்றார்கள்.

கேள்வி: அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா?, அல்லது குறைகின்றனரா?

பதில்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.

கேள்வி: அவர் காட்டுகின்ற மார்க்கத்தில் நுழைந்த பின்னர் அதன் மீது அதிருப்தி கொண்டு யாரேனும் அந்த மார்க்கத்திலிருந்து விலகியதுண்டா?

பதில்: இல்லை

கேள்வி: அவர் இப்போது வாதிக்கின்ற (நபித்துவ) வாதத்தை சொல்வதற்கு முன்பு அவர் பொய் சொல்வதாக எப்போதாவது அவரை சந்தேகித்ததுண்டா?

பதில்: இல்லை

கேள்வி: அவர் (எப்போதாவது) வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்திருக்கிறாரா?

பதில்: இதுவரை இல்லை. நாங்கள் இப்போது அவருடன் (ஹுதைபியா என்னும் இடத்தில்) ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது.

(இந்த பதிலைக் குறிப்பிடுகின்ற அபூஸுஃப்யான் அவர்கள் அப்போதைக்கு முஹம்மது நபி மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்).

கேள்வி: அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கின்றீர்களா?

பதில்: ஆம்

கேள்வி: அவருடன் நீங்கள் புரிந்த போர்களின் முடிவுகள் எவ்வாறிருந்தன?

பதில்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றி தோல்வி மாறி மாறி வந்திருக்கின்றன.

கேள்வி: அவர் உங்களுக்கு என்ன போதிக்கின்றார்?

பதில்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள், உங்கள் முன்னோர்கள் கூறிவந்த தவறான கொள்கைகளை விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறார். தொழுகை, உண்மை பேசல், கற்பு நெறியுடன் வாழுதல், உறவினர்களுடன் ஒட்டி உறவாடி வாழுதல் போன்ற அறப்பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.

பதில்களை பெற்றுக்கொண்ட ஹிர்கல் மன்னர் பின்வருமாறு கூறினார்:
"நான் உம்மிடம் அவரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு நீர் அளித்த பதில்களை கவனிக்கினற போது ஒரு உண்மை புரிகின்றது.

எந்த இறைத்தூதருமே இவரைப்போன்றே அவரவரின் சமூகத்திலுள்ள உயர்ந்த பாரம்பரியத்திலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவருக்கு முன்னர் (இவருடைய பாரம்பரியத்தில்) யாரேனும் இந்த வாதத்தை செய்திருந்தால் "முன்னர் செய்யப்பட்டு வந்த வாதத்தைப் பின்பற்றித்தான் இவரும் செய்கிறார்" என்று எண்ணியிருப்பேன்.

இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் தமது முன்னோரின் மன்னராட்சியை இவர் அடைய விரும்புகின்றார் என்று எண்ணியிருப்பேன்.

இந்த (தூதுத்துவ) வாதத்தை இவர் செய்வதற்கு முன்பு பொய் சொல்லக்கூடியவர் என்று அவரை நீங்கள் சந்தேகித்ததும்கூட இல்லை என்கின்றபோது "மக்களிடம் பொய் சொல்லத் துணியாதவர் இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

ஆரம்பத்தில் சாமானியர்கள்தான் அவரை பின்பற்றுகின்றனர் என்பது முற்றிலும் உண்மையே. அப்படிப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்களை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.

அவரை பின்பற்றுபவர்கள் அதிகரித்துச்செல்ல காரணம் என்னவென்றால், இறைநம்பிக்கையைப் பொறுத்தவரை அது நிறைவுறும் வரை அப்படித்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரும் அதிருப்தி கொண்டு அதிலிருந்து விலகவில்லை என்பதற்கு காரணம், விசுவாசத்தின் தெளிவு இதயங்களுக்குள் புகுந்து பதிந்து விடுகின்றது.

இறைத்தூதர்களில் யாரும் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதற்கேற்ப இவரும் அவ்வாறு திகழ்கிறார்.

எனவே நீர் அவரைப் பற்றி குறிப்பிட்ட புதில்கள் யாவும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார்.


அதே தொடரில் அபூ சுஃப்யானின் இந்த வாசக அமைப்பு இஸ்லாத்தின் பால் அவரின் உள்ளம் ஏற்கெனவே ஈர்க்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்தியம்புகிறது

(நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். அப்போது என்னுடன் வந்தவர்களிடம், ''ரோமர்களின் மன்னன் அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு முஹம்மதின் காரியம் இப்போது மோலோங்கி விட்டது'' என்று கூறினேன். (அப்போதிருந்தே) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான்.) (1)

முஹம்மது நபி எவரையும் வாள்முனையில் இஸ்லாத்தை நோக்கி அழைத்தது இல்லை. இதற்கு விளக்கமாக பின்வரும் சம்பவத்தை கூறலாம்:

நபியவர்கள் தங்களின் படையுடன் திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியில் இளைப்பாரினர். அம்மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த முஹம்மது நபியின் வாளை எடுத்துக்கொண்டு ஒருவர், முஹம்மதே, இப்பொழுது யார் என்னிடத்தில் இருந்து காப்பாற்றுவார் என்றார். அதற்கு முஹம்மது நபி "அல்லாஹ்தான்" (காப்பாற்றுவான்) என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார்கள். இவ்வார்த்தையின் அழுத்தத்தை கேட்டு எதிரியின் கையிலிருந்த வாள் நழுவியது. அதனை எடுத்துக்கொண்ட முஹம்மது நபியவர்கள், "இப்பொழுது யார் என்னிடமிருந்து காப்பாற்றுவார் என்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றார்". ஆனால் அவர் மறுக்கவே முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யக்கூடாது என்ற வாக்குறுதியை வாங்கிக்கொண்டு தண்டிக்காமல் பத்திரமாக அனுப்பிவிட்டார். (1)

ஒரு அரசரை கொலை செய்ய எத்தனித்தவனை பத்திரமாக அனுப்பிவைத்தவர்தான் முஹம்மது நபி. தவிர, இஸ்லாத்தை ஏற்காத ஒருவரை வாளினால் மிரட்டி கட்டாயப்படுத்தவில்லை.

காரணம் "இம் மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது" (4) என்பது திருக்குர்ஆனின் கட்டளை.

இப்பொழுது நேசகுமார் எடுத்துவைத்த விஷயத்திற்கு வருவோம்.

//"நான் அவரை(அபூஸுஃப்யான்) அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் "அபூஸுஃப்யானே உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா?" எனக் கேட்டார்கள். "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள்; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு எதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்" என அபூஸுஃப்யான் கூறினார்.

அதற்கு நபியவர்கள் "அபூஸுஃப்யானே! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை?" என்றார்கள். "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள்; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது" என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட அப்பாஸ்(ரழி) "உனக்கென்ன கேடு! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!" என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார். "

[பக்கங்கள் 490-491. "ரஹீக்" ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான். தாருல் ஹுதா பதிப்பகம், மண்ணடி, சென்னை-1.]//


இதே அபூஸுஃப்யான்தான் முஸ்லிம்களுக்கு எதிராக போர்களில் கலந்துக்கொண்டு பல உயிர்ச்சேதங்களை ஆற்றிவுள்ளார். உஹது போரில் இவரின் மனைவி ஹிந்த் பின் உத்பா என்ற பெண் நபியவர்களின் பெரிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களின் ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்து முடியாமல் போகவே அதைத்துப்பிவிட்டு, பின்பு கொல்லப்பட்ட முஸ்லிம் படையினரின் காதுகளையும் மூக்குகளையும் அறுத்து தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்து கொண்டார்(2) என்பதின்மூலம் முஸ்லிம்களின் மேல் உள்ள அவர்களின் பகைமை என்னவென்று விளங்கும்.

இதே உஹதுபோரில்தான் முஹம்மது கொல்லப்பட்டுவிட்டார் என்று அபூஸுஃப்யானிடம் இப்னு கமிஆ என்பவன் கூறகேட்டவுடன் அச்செய்தியை அறிந்துக்கொள்ள மகிழ்ச்சியால் உந்தப்பட்டு மலையின் மீது ஏறி உங்களில் முஹம்மது இருக்கிறாரா என்று கேட்கிறார். ஆனால் முஹம்மது நபி உயிரோடு இருக்கும் செய்தியை முஸ்லிம்களின் தரப்பிலிருந்து உமர் அவர்கள் அறிவித்தார்.

முஸ்லிம்கள் மிகப் பெரிய அளவில் கொல்லப்பட்டதை பார்த்து, "எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது" என்றார் அபூஸுஃப்யான்.(1)

பிறகு அடுத்த ஆண்டு அரபி மாதம் ஷஅபானில் போருக்கு அழைப்பு விடுத்து விட்டு மக்கா நோக்கி திரும்பினார்.(2)

உஹதுப் போரில் கிடைத்த உத்வேகத்திலும், துணிச்சலிலும் முஸ்லீம்களை போருக்கு அழைத்தது இந்த அபூஸுஃப்யான் என்பது நேசகுமாருக்கு தெரியாமல் போனதெப்படி? போருக்கு அழைக்கும் ஒருவன் எப்படி உயிருக்குப் பயந்தவனாக இருப்பான்?


ஹிஜ்ரி 8, ரமளான் மாதம் பிறை 10-ல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 10,000 பேர் தாங்கிய படைவீரர்களுடன் மக்கா நோக்கி சென்றார். நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இஸ்லாத்தை ஏற்று நபியவர்களை சந்திக்க மதீனா நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது மக்காநோக்கி வரும் முஸ்லிம்களின் படையை ஹுதைபா என்னுமிடத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.

வரும் வழியில் முஸ்லிம்கள் "ஃபாத்திமா பள்ளத்தாக்கு" என்று கூறப்படும் மர்ருள் ளஹ்ரான் என்னுமிடத்தில் தங்கியிருக்கும்போது, அப்பாஸ்(ரலி) அவர்கள் முஹம்மது நபியின் வாகனத்தின் மீதேறி மக்கா குறைஷிகள் யாரேனும் தென்பட்டால் அவர்களுக்கு முஹம்மது நபி படையெடுத்துவரும் செய்தியை தெரிவித்து முஸ்லிம்கள் மக்காவுக்கு நுழைவதற்கு முன்னால் அவர்களுக்கு பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள் என்பது அப்பாஸின் நோக்கமாக இருந்தது.

முஹம்மது நபி படையெடுத்து வரும் செய்தி மக்கா குறைஷிகளுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்று பயத்துடன் எதிர்பார்த்து இருந்தார்கள். வருவோர் போவோரிடமெல்லாம் நபியவர்களின் செய்திகளைப்பற்றி துருவி துருவி விசாரித்துக்கொண்டிருந்தார் அபூஸுஃப்யான். முஸ்லிம்கள் மேற்கண்ட இடத்தில் தங்கியிருந்த இரவுதான் அபூஸுஃப்யான், ஹக்கீம் இப்னு ஹிஸாம், புதைல் இப்னு வரக்கா என்ற மூவரும் நிலவரங்களை அறிந்துக்கொள்வதற்காக மக்காவைவிட்டு வெளியேறுகிறார்கள்.

அவ்விரவில் முஸ்லிம்கள் படையில் பத்தாயிரம் நெருப்பு குண்டங்களை எதிரிகளுக்கு தனது படையின் வலிமையை காட்டுவதற்காக மூட்டினர். அதனை தூரத்திலிருந்து கண்ணுற்ற அபூஸுஃப்யான் "இன்றைய இரவில் எரியும் நெருப்பைப் போன்றும், இங்குக் கூடியிருக்கும் படையைப்போன்றும் நான் வேறு எப்போதும் பார்த்ததில்லை என்று புதைல் என்பவரிடம் கூறினார். அவ்விடத்தில் அபூஸுஃப்யான் அவர்களின் பேச்சை குறைஷிகளை தேடிவந்த அப்பாஸ்(ரலி) அவர்கள் கண்டுக்கொண்டார்கள்.

அப்பாஸ் அவர்களைப் பார்த்து அபூஸுஃப்யான் இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில் "உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்" என்று கூறினார். அதற்கு அப்பாஸ்(ரலி) அவர்கள், "இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர்" என்று கூறுகிறார்.

தப்பிப்பதற்கு வழி என்னவென்று அபூஸுஃப்யான் கேட்க, அதற்கு அப்பாஸ் உன்னை நபியவர்களிடம் அழைத்துச்சென்று உனக்கு பாதுகாப்பு தேடுகிறேன் என்று அபூஸுஃப்யானை அழைத்துச் செல்கிறார். அபூஸுஃப்யானின் மற்ற இருதோழர்கள் திரும்பிச் சென்றுவிடுகின்றனர்.

பாதுகாப்பு வழங்குவதற்காக அப்படையின் தளபதியிடமே செல்கிறார். இப்பொழுதுதான் நேசகுமார் குறிப்பிட்ட அந்த உரையாடல் நடக்கிறது.

தன்னை ஒழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்த எதிரிகளை போர் சந்தித்தால் முஸ்லிம்கள் கொன்றுவிடுவார்கள் எனும்போது அந்தத் தருணத்தில்தான் இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தன் உறவினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சொன்ன வார்த்தைதான் தவிர முஹம்மது நபியின் வார்த்தை அல்ல. முஹம்மது நபி எதிரிகளை போரில் சந்திக்க பயப்படவும் இல்லை. அவரிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை மன்னிக்காமல் விட்டதும் இல்லை. இப்படித்தான் தனது சிறிய தந்தையின் ஈரலை மென்று விழுங்க நினைத்து அபூஸுஃப்யான் அவர்களின் மனைவியையும் ஹம்சா அவர்களை மறைந்திருந்து கொன்ற வஹ்ஷி என்பவரையும் மன்னித்தார்.

தந்தையர்கள் உருப்படாமல் போய்விடுவாய் ஒழுங்காக படி என்று சொல்வது, மகனை உருப்படாமல் போகச் செய்ய மிரட்டினார்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். தனது உறவினரான அபூஸுஃப்யானை காப்பாற்ற அப்பாஸ் அவர்கள் சொன்ன கூற்றுதான் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறுவதற்கு ஆதாரமாக தெரிகிறது நேசகுமாருக்கு.

இன்றைய தினம் (நான்) உங்கள் மீது எந்த குற்றமும் (சுமத்துவது) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" (3) என்ற வசனத்தை யூசுஃப் நபி கொடுமை செய்த தன் சகோதரர்களை மன்னித்ததுபோல் தானும் மன்னிக்கிறேன் என்கிறார் முஹம்மது நபியவர்கள்.

அதற்கு அபூஸுஃப்யான் அவர்கள்:

இது சத்தியம்! லாத்துடைய வீரர்கள்
முஹம்மதின் வீரர்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக
நான் போர்க்கொடி சுமந்தபோது
இருளில் சிக்கித் தவிக்கும் திக்கற்ற பயணிபோல் இருந்தேன்
இது எனக்கு சிறந்த நேரம்
நான் நேர்வழிக்கு அழைக்கப்படுகிறேன்
அதை ஏற்று நானும் நேர்வழி பெறுகிறேன்
என் நேர்வழிக்கு நான் காரணமல்லன்
நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியடித்தேனே
அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி
அல்லாஹ்வை காட்டித் தந்தார்

என்ற கவிதையை பாடிக்காட்டுகிறார். (2)

அப்பாஸ் அவர்கள் அபூஸுஃப்யான் அவர்களிடம், "உடனடியாக நீ உன் கூட்டத்தினரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறிவிப்புச் செய்!" என்கிறார். அபூஸுஃப்யான் அவர்கள் மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு "குறைஷகளே! இதோ.. முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே, பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பு பெறுவர்" என்று முழக்கமிட்டார்.

அபூஸுஃப்யானின் இந்நிலையை கண்ட அவரது மனைவி அபூஸுஃப்யானின் மீசையை பிடித்திழுத்து "கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்" என்று கூறுகிறார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான், மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது. எனது பேச்சைக் கேளுங்கள்!. இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்பு பெறுவர்" என்று கூறினார். அதற்கு "அல்லாஹ் உம்மை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?" என்று மக்கள் கேட்டனர். "யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார். யார் மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனிதமிக்க கஃபா பள்ளிக்கு செல்வாரோ அவரும் பாதுகாப்பு வெறுவார்" என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், பள்ளியை நோக்கி ஓடினர்.

தன்னைத்தேடி தேடி கொல்லவந்தவரை (அபூஸுஃப்யான்) மன்னித்து அவர் வீட்டுக்கு சென்று பாதுகாப்பு தேடியவர்களையும் மன்னித்தவர்தான் முஹம்மது நபி.

அபூஸுஃப்யான் மிரட்டப்பட்டாரா அல்லது பாதுகாக்கப்பட்டாரா என்னும் மேற்கண்ட விபரங்கள் நேசகுமார் ஆதாரமாக எடுத்துவைத்த அதே "ரஹீக்" புத்தகத்தில்தான் (பக்கங்கள் 487-492) இருக்கிறது. காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பதுபோல, இவருக்கு படிப்பதெல்லாம் இஸ்லாத்திற்கெதிராகத்தான் தெரியும் போல.

ஆதாரங்கள்:
(1) புகாரி
(2) இப்னு ஹிஷாம்
(3) அல்குர்ஆன் 12:92)
(4) அல்குர்ஆன் 2:256)