Thursday, March 31, 2005

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்

இஸ்லாத்தின் தோலை உரித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய நேசகுமார் அவர்கள் தனது விமர்சனங்களும் விளக்கங்களும் என்ற பதிவில் அவருடைய தன்னிலை விளக்கத்தை படிக்க நேர்ந்தது. தனி ஒரு மனிதனாக போராட வேண்டியிருக்கிறது, நானும் குடும்பஸ்தன், பன்முகங்கள் பல கொண்டவன், சமுதாய வாழ்க்கையில் பங்கு கொள்ளல் என்றெல்லாம் தனது இயலாமையை, இயல்பை எழுதியிருந்தார்.

அவரின் இந்த விஷப்போராட்டத்தில் தனது உண்மையான முகம் வெளிப்படப் போகிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ளும் நேரம் துவங்கிவிட்டதென்பதே அவரின் இத்தன்னிலை விளக்கத்தின் காரணம்.

சத்தியத்தை எடுத்தியம்புவது, அதை எப்பாடு பட்டாகிலும் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடுவது என்று முடிவெடுத்து சத்தியத்திற்க்காக போராடும் ஒரு மனிதன் தனது இயலாமையை இப்படியெல்லாம் பறைசாற்ற மாட்டான். காரணம் தான் எடுத்துக் கொண்ட முயற்சியை எப்படியாயினும் நிலை நிறுத்திக் காட்டவேண்டும் என்ற உறுதியும் அதற்கான உதவியும் தன்னிடத்திலிருந்தே அவன் தேடிக் கொள்ளவேண்டுமே தவிர்த்து, தன்னால் இயலவில்லையே என்று புலம்புவது சரியல்ல.

நேசகுமார் உள்வாங்குதலும் காலம் தாழ்த்துதலும் என்று ஒரு நல்ல விளக்கம் அளித்திருந்தார். இப்படி காலம் தாழ்த்துதலும், உள் வாங்குதலும் ஒரு கருத்தை சொன்ன மனிதன் தனது கருத்தை பிரிதொரு நேரத்தில் அலசிப் பார்க்கவும் அது சரியா தவறா என்று அந்த மனிதனே புரிந்துக் கொள்ளவும் அவகாசம் இருக்கும் என்றெல்லாம் நல்ல விளக்கம் கொடுத்தார். பிரச்சினை என்னவென்றால், இப்படி விளக்கம் கொடுததவர் எப்போதாவது தான் எழுதியதை திரும்பிப் பார்த்திருப்பாரா? தான் எழுதியதில் ஏதேனும் தவறு இருக்குமா என்று உள்வாங்குதல் செய்திருப்பாரா?

இல்லை. செய்வதில்லை என்பது அவரது இத்தனை கால இடைவெளி இருந்தும் எதையாவது எழுதி வைப்போம் என்பதிலிருந்து நன்றாக காட்டுகிறது. காரணம் மிகச் சாதாரணமானது. அதாவது, உள்நோக்கு நிறைந்த அவதூறு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் எழுதி வருகிறார்.

அப்படி அவர் எழுதியதிலிருந்து தற்போது எனது இரண்டாவது கேள்வியாக இங்கே முன் வைக்கிறேன். இதுவரை எனது முதல் கேள்விக்கு பதில் இல்லை. பகரமாக ஹமீது ஜாபருக்கு பதில் சொல்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்தும் அவர் எவ்வாறு தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதை நான் பிறகு எழுதுகிறேன். காரணம் இன்று அவர் எழுதியதிலிருந்து ஒருவேளை தனது உள்வாங்குதல் என்ற பயிற்சியை தொடங்கலாம் அல்லவா? அதற்கு இன்னுமோர் அவகாசம் கொடுப்போம்.

இரண்டாவது கேள்விக்கு வருகிறேன்.

நேசகுமாரின் இஸ்லாத்திற்க்கு எதிரான விஷப் பிரச்சாரத்திற்கு இன்னுமொரு ஆதாரம். நேசகுமார் தனது கட்டுரைக்கு ஆதாரத்தை தருகிறேன் என்று அவ்வப்போது எவ்வாறு மறைத்தும் திரித்தும் எழுதுகிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம். இவரின் கீழ் கண்ட கட்டுரையில்


சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:

கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.

பொதுவாக இதுபோன்ற கற்பழிப்பு சம்பந்தப்பட்ட குற்றங்கள் அமெரிக்காவில் அதிகமாகவும், சவுதி அரேபியா பொன்ற நாடுகளில் குறைவாகவும் நடப்பதை அவ்வப்போது கோடிட்டு காட்டுவது முஸ்லீம்களுக்கு வழக்கம், ஆனால் அதற்கு புதிதாக ஒரு ஷரீஅத் சட்டத்தை காரணமாக கற்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

நேசகுமாரின் மேல் சொன்ன கட்டுரையில், இரண்டு விஷயங்களை ஒன்றாக குழப்பி இஸ்லாத்தை, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விஷமத்தனாமாக அறிமுகப் படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. இஸ்லாம் சொல்லும் அவதூறு செய்பவர்களுக்கான குற்றவியல் சட்டத்தை, கற்பழிப்புக்கான தண்டனை என்று இரண்டையும் குழப்பி தன் விஷ வாதத்திற்கு ஆதாரம் தேடியிருப்பதை காணலாம்.

ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் சமூகத்தில் அவளுக்கு ஏறபடக்கூடிய விபரீதமும், ஒரு ஆணைப் பற்றி தவறாக பேசினால் அவனுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு ஏனோ தானோவென்று அவதூறுகள் கூடாது என்பதற்காக அவதூறு தொடர்பான ஷரீஅத் குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.

அவர் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் கற்பழிக்கப் பட்ட பெண் அங்கும் இங்கும் அலைந்து தானெ ஒரு புலன் விசாரனை செய்து, நான்கு சாட்சிகளை தேடி அவர்களுடன் கூட்டமாக சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று தனது குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் அந்தப் பெண்ணையே கல்லால் அடித்து கொல்லப்படுவாள் என்று கதை நீட்டி இருக்கிறார் நேசகுமார். அதானால்தான் இஸ்லாமிய நாடுகளில் புகார்கள் குறைவாக இருப்பதாகவும் காரணம் கண்டுபிடித்துள்ளார்.

நேசகுமார் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறார் என்பதைப் பார்க்கலாம். அவரே வேறொரு கட்டுரையில் கீழ்க் கண்டவாறு அவதூறு தொடர்பான குற்றவியல் சட்டத்தை அவருடைய வார்த்தைகளிலேயே விவரிப்பதை பார்க்கலாம்.

இவரின் "இஸ்லாத்தில் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும்" (x) என்ற கட்டுரையில், முகம்மது நபி போர்களத்திலிருந்து திரும்பி வரும்வழியில் தங்கியிருக்கும்போது. மல ஜலம் கழிப்பதற்காக கூடாரத்திற்க்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகம்மது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர். திரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே, அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் என்றும் சஃவான் என்ற முஸ்லீம் ஆயிஷாவை அடையாளம் கண்டு முகம்மது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார். ஆனால் இந்த நிகழ்வின் தொடர்பாக ஆயிஷா அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டது என்றும்


இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 "எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்."

என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு கூறப்படுவது கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சொல்வது சம்பந்தமான குற்றவியல் சட்டம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதனை கற்பழிப்புக்கான சட்டம் என்று தனக்குத் தொன்றியதை வைத்து விஷம் கக்குவது ஏன்?

இஸ்லாத்தை பற்றி ஆதாரத்துடன் விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லும் நேசகுமார் எடுத்துவைக்கும் ஆதாரமெல்லாம் இத்தகையதுதான்.

கற்பழிப்புக்கும், கற்புள்ள பெண்களைப் பற்றி அவதூறு சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் எழுதுவதுதான் நேர்மையான விமர்சனமா?

இவர் சொன்ன
"தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை".
என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.

எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.

அது மட்டுமல்லாமல். இவரின் இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டுமென்பதே எனது விருப்பம். காரணம் அவர் ஆங்கில மொழிகளில் இஸ்லாத்தை எதிர்க்கும் யூத, கிருஸ்தவர்களால் எழுதிவைக்கப்பட்ட இஸ்லாத்திற்கெதிரான இத்தகைய நுணுக்கமான அவதூறு விஷயங்களை தமிழில் எழுதுவதன் மூலம் இவைகளுக்கு பதில் அளிக்க என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் வழியாக குறைந்த பட்சம் ஓரளவாவது மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தின் மேல் உள்ள அவதூறுகளை புரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நேசகுமாரின ஆதாரத்திற்கு காத்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், உங்களின் பதில்களும் ஆதாரங்களும் தாங்கள் தெரிவித்த மேலே சொன்ன கேள்வியை ஒட்டியே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

_____________________
x] http://www.thinnai.com/pl11110410.html

Monday, March 21, 2005

வாருங்கள் விவாதிக்கலாம்

முஸ்லீம் அல்லாதவர்கள் இஸ்லாத்திப் பற்றி விவாதிக்கலாமா என்ற ஒரு கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் நேசகுமார் அவர்களுக்கு "இறை ஆவேசம்" வந்ததில் ஆச்சர்யமில்லை. என் மதத்தைப் பற்றி எவன் எவனோ விமர்சனங்கள் செய்யும்போது மற்ற மதங்களைப் பற்றி நான் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று அவர் கேட்பது புரிகிறது. யாரய்யா வேண்டாம் என்று சொன்னது? நன்றாக விமர்சனம் செய்யுங்கள். அதைத்தானே நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

விமர்சனம் செய்யும்போது விளக்கங்கள் கேட்பார்களே அதற்கும் தயாராக இருந்துக் கொண்டு விமர்சனம் செய்யுங்கள். சேற்றை எடுத்து தெருக்களில் போவோர் வருவோர் மேல் எல்லாம் வீசிக் கொண்டிருந்தால் அதற்கு பெயர் விமர்சனம் என்று பெயர் அல்ல. அப்படி செய்பவர்களுக்கு என்ன பெயர் என்று படிப்பவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

இப்படி ஏற்கனவே பல இடங்களில் நீங்கள் சேற்றை அள்ளி வீசியிருக்கிறீர்கள், அதில் ஒவ்வொன்றாக வருகிறேன். உங்களது காழ்ப்புணர்ச்சியுடன் தொடுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் உங்களிடம் கேட்க உள்ளேன். இதற்கு முன்பாக நான் எனது 'நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று' தலைப்பில் கேட்ட கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் இல்லை. என்ன காரணம்? இது போன்ற விஷயங்களை எழுதும்போது ஆதாரங்களை வைத்துக் கொண்டு எழுதுவதுதானே சிறந்தது, அல்லது எதை வேண்டுமானலும் எழுதலாம் என்று எழுதுகிறீர்களா? விவாதம் தேவையா என்றவுடன் வீரியம் கொண்டு எழுதும் அளவிற்கு திறமை கொண்ட உங்களுக்கு ஆதாரம் கொடுப்பதற்க்கு இத்தனை காலம் ஏன்? காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் விவாதங்கள் வரும்போது இதை சாவகாசமாக மறந்துவிடாலம் என்ற காரணத்தாலா? நான் இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார்த்தைகளை கொட்டிவிட்டு அதை நியாயப்படுத்துவது என்பதைவிட யோசித்து செயல்படுவதே சிறந்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அய்யா! இஸ்லாத்தின் உண்மையான முகத்தைப் பார்க்க பயம் என்று எழுதியிருக்கிறீர்கள், இன்னும் சகதியில் புழுத்துக் கிடக்கும் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இஸ்லாம் என்ற கண்ணாடியில் உங்களின் முகத்தைப் பார்க்க நீங்கள் பயப்படுகிறீர்கள். இஸ்லாம் என்ற உரை கல்லில் உங்களின் கொள்கைகளை உரசிப் பார்க்க பயம். இஸ்லாம் வெறும் இறை வணக்க முறைகளை மட்டும் உபதேசித்தால் உங்களுக்கு இந்த பயம் வராது. இஸ்லாம் வாழ்க்கை முறையையும் பேசுவதால்தான் உங்களுக்கு இந்த பயம். இதுநாள் வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை சரியா தவறா என்ற கேள்வியை கேட்க வைக்குமே என்ற பயம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உண்மையை உரசிப் பார்க்க பயம்.

இஸ்லாத்தைப் பற்றி நமக்கு நாமெ கற்பித்துக் கொண்ட அந்த உருவகங்கள் உடைந்துபோகும் என்று எழுதியிருக்கிறீர்கள். யாரய்யா அப்படி உங்களுக்கு நீங்களே உருவகங்களை கற்பித்துக் கொள்ளச் சொன்னது? எங்கிருந்து வந்தது அந்த அழகிய உருவகங்கள்? வாளாலும், வன்முறையாலும் வளர்ந்த மதம் என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் உங்களின் உள்ளங்களில் எப்படி இஸ்லாத்தைப் பற்றிய அழகிய உருவகங்கள் உருவானது?

விவாதங்கள் தேவைதான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படி இருந்த்தால் தான் வளர்ச்சி இருக்கும். நானும் அபூ முஹை மட்டும் விவாதிக்கொண்டால் போதாது. நானும் நீங்களும் விவாதிக்க வேண்டும், ஒரு குப்புசாமியும் குத்புதீனும் விவாதிக்க வேண்டும். இந்திய ஆயுர்வேத மருத்துவத்தையும் இன்னும் சமஸ்கிருத காவியங்களையும் கி.பி. 1200 களில் சிரமப்பட்டு அரபியில் மொழியாக்கம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு அது சாத்தியமானது அவர்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டதால்தான். யுனானி மருத்துவ முறையயும் சித்த வைத்திய முறையும் சங்கமித்தது அரேபிய மண்ணில்தான்.

நேசகுமாரின் விரிவான விவாதங்களுக்கு காத்திருப்பதோடு எனது முந்தைய கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று விடை பெறுகிறேன்.

Sunday, March 20, 2005

எது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்

நேசகுமாரின் வார்த்தை விளையாடல்களை படித்தப் போது முதலில் இஸ்லாத்தின் ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டும், எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எவைகள் ஆதாரமற்றவைகள் என்று ஒதுக்க வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு முதலில் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறேன் என்ற பெயரில் நபிகளாரின் மறைவுக்குப்பின் முஸ்லிமாக மாறிவிட்டதாக நடித்த சில யூதர்கள் நபிகளின் பெயரைச் சொல்லி இஸ்லாத்தில் இல்லாததையும், பொல்லாததையும் திரித்தும் மறைத்தும் கதை சொன்னார்களோ அதே வேலையைத்தான் தற்போது நேசகுமார் என்பவரும் செய்து வருகிறார். எனவே, ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்லிவிட்டால் அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது எளிதாக இருக்கும்.

ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான "இஞ்சீல்" எனப்படும் "பைபிள்" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக

1) முஹம்மது நபி சொன்னார் என்று யூதர்களின் வேதத்தில் உள்ள (இஸ்லாத்திற்கு எதிரான) கருத்துக்களை இஸ்லாத்தில் திணிப்பது.

2) குர்ஆன் சுன்னாவின் மீது களங்கத்தை ஏற்படுத்த இட்டுகட்டிய செய்திகளை நபியவர்களின் செய்திகளோடு இணைப்பது. இதனால் முஹம்மது நபியின் மீது களங்கம் ஏற்படுத்தி இஸ்லாத்தை வீரியமற்றதாக ஆக்கலாம் என்று செயல்படலானார்கள்.

இவ்வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளூவு" வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளூவு" என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத- அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

x] திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாக அமைந்தவை.
x] புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
x] அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
x] இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

இன்னும் இதுபோன்றவை இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

ஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு உண்மையை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அன்றைக்கும், என்றைக்கும் இருந்தார்கள். இன்றைக்கு எப்படி குர்ஆனை திரித்தும் அழித்தும் எழுதி மேலை நாடுகளில் வெட்கமில்லாமல் பிரசுரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைக்கும் இருந்தார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!

x] யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.

அடுத்து, இஸ்லாத்தில் வந்த பிரிவுகள், அந்த அந்த பிரிவுக்கு தகுந்தார் போல் அவர்களின் பிரிவை நியாயப்படுத்தி நபி அவர்கள் சொன்னதாக பொய் சொன்னார்கள். இதில் ஷியா பிரிவினர் முதலிடம் வகிக்கிறார்கள்.

x] ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்து வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் தலைவராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார்.

அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.

இன்னொரு பக்கம், சில வியாபாரிகள் தங்களின் சரக்கை விற்பதற்க்காக நபி அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள்.

x] கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).
x] பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவ்வாறான செயல்பாடுகள் இனம் கண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சில அறிஞர் பெருமக்கள் முன்வந்தார்கள். இன்னும் சிலர் நபி அவர்களின் வாழ்க்கை முறையை நபியவர்களின் தோழர்களால் அவர்கள் தோழர்களால் சொன்ன செய்தியை(ஹதிஸை) புத்தகமாக தொகுக்க வில்லை என்றால், இஸ்லாம் சிதைந்து விடும் என்பதை உணர்ந்து அவர்கள் அதை புத்தகமாக் தொகுத்தார்கள்.

அன்றைய காலத்தில் நபி அவர்களை பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா? என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.

இவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்.

சில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.

சில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்.

இப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூற்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றதாகவும் ஆகிவிட்டது.

இப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.

கெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்க படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.

அறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்து வைத்து இருக்கின்றோம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.

ஆதாரப்பூர்வமானவை
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.தமிழாக்க ஹதீஸகளில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.

உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். "தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.

1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ

2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ

1) -> அபூ அவானா -> குதைபா ->
2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் ->
ஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.

1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.

அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம். அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று யார் சொன்னாலும் இங்கே அப்படிப் பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கே ஒரு கேள்வி எழலாம், தப்ஸீருகளில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிவில் குறைந்தவர்களா நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்கலாம்.

இல்லை அவர்களைவிட நான் அறிவாளியல்ல. அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இதைத்தான் அவ்வப்போது நேசகுமார் போன்றவர்கள் பிடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக கதைகள் எழுதுவது வழக்கம்.

நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.

திர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.

இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.

தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதிஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் நிராகரிக்கப்படும்.

இந்த மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய விவாதங்களும், ஆதாரங்களும் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்ளப்படும். இவைகளை இன்னும் சரிவர புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், ஹதீஸ்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தமிழிலும் இன்னும் பிற மொழிகளிலும் உள்ளனர். அவர்கள் எழுதிய ஹதீஸ் கலைகள் தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டு இஸ்லாத்தை பற்றிய முழு அறிமுகம் செய்வது சிறந்தது.

Thursday, March 03, 2005

நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று

நேசகுமாரின் "இஸ்லாம் ஒரு முழு அறிமுகம்" வலைப்பதிவிற்குள் சென்றபோது, எனக்கு முதலில் தென்பட்டது, வலைப்பதிவின் தலைப்பு "இஸ்லாம் முஸ்லீம் அல்லாதோர் பார்வையில்" என்று மாறியிருந்ததுதான். ஏன் இப்படி உள்ளொன்றும், புறமொன்றுமாக தலைப்பு இருக்கிறதென்று புரியவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதன் காரணத்தாலோ என்னவோ. அவரின் கருத்துக்களும், எழுத்து நடைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் எனக்கு காட்டுகின்றன.

ஒரு வேளை இது தொழில் நுட்பக் கோளாராகக் கூட இருக்கலாம். இந்த தொழில் நுட்பக் கோளாறு இயந்திரங்களுக்கும், வாகனங்களுக்கும் மேலும் கணினிகளுக்கும் மட்டும் ஏறபடக் கூடியதல்ல. மனிதர்களுக்கும் ஏற்படக் கூடியதுதான். இந்தக் கோளாறு, உடலின் அங்கங்களில் மட்டும் இருக்கும் போது, துன்பம் பாதிப்படைந்த அந்த மனிதனோடு மட்டும் நின்று விடுகிறது. ஆனால், மனிதனின் கட்டுப்பாட்டு தலைமையகமான மூளையிலும், அதைத் தொடர்ந்து வரும் சிந்தனையிலும் வரும் போது, அது பாதிக்கப்பட்ட மனிதனோடு நில்லாமல், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. நேசகுமாரின் கட்டுரைகளை படிப்பவர்களுக்கு இது எந்த விதமான கோளாறு, பாதித்திருப்பது எங்கே என்று படிப்பவர்களுக்கு புரிந்துவிடும்.

பிரச்சனைக்கு வருவோம். நேசகுமார் தனது கட்டுரை ஒன்றில் "நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது" (1) என்ற அப்பட்டமான வரலாற்று பிதற்றல்களை எழுதியுள்ளார்.

இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.

இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் "நபிகளாரின் காலத்திலேயெ" என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.

பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!

குறிப்பு:
1) நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள் - நேசகுமார் (திண்ணையில் வெளியான கட்டுரை 16/12/2004)

அறிமுகம்

அனைவருக்கும் சலாம்.

என் பெயர் அப்துல்லாஹ். கடவுள் அருளால் அனைவரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆவல். நான் இணைய உலகத்துக்கு பழையவனும், விவாதத்திற்கு புதியவனுமாவேன். சினேகிதனால் அறிமுகப்படுத்துப்பட்ட தமிழ்மணத்துக்கு அவ்வப்போது தலை காட்டிச் செல்வதுண்டு.

"இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்" என்று தனக்கு தோன்றியதெல்லாம் ஏதோ கண்டுபிடிப்புபோல் இஸ்லாத்தைப்பற்றியும் முகம்மது நபி பற்றியும் புதுசு புதுசா விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நேசகுமார்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை வைப்பது அவரவர் உரிமை. ஆனால் பொதுவில் வந்து தப்பும் தவறுமாக திரிப்பதும் சவால் விடுவதும்தான் என்னை இங்கு எழுத தூண்டுகிறது. உண்மையை மற்றவர்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன், தவிர நேசகுமாருக்காக அல்ல.

இங்கு வந்து, நேரத்தை செலவு செய்து படித்ததற்கு மிக்க நன்றி.