Monday, March 21, 2005

வாருங்கள் விவாதிக்கலாம்

முஸ்லீம் அல்லாதவர்கள் இஸ்லாத்திப் பற்றி விவாதிக்கலாமா என்ற ஒரு கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் நேசகுமார் அவர்களுக்கு "இறை ஆவேசம்" வந்ததில் ஆச்சர்யமில்லை. என் மதத்தைப் பற்றி எவன் எவனோ விமர்சனங்கள் செய்யும்போது மற்ற மதங்களைப் பற்றி நான் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று அவர் கேட்பது புரிகிறது. யாரய்யா வேண்டாம் என்று சொன்னது? நன்றாக விமர்சனம் செய்யுங்கள். அதைத்தானே நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

விமர்சனம் செய்யும்போது விளக்கங்கள் கேட்பார்களே அதற்கும் தயாராக இருந்துக் கொண்டு விமர்சனம் செய்யுங்கள். சேற்றை எடுத்து தெருக்களில் போவோர் வருவோர் மேல் எல்லாம் வீசிக் கொண்டிருந்தால் அதற்கு பெயர் விமர்சனம் என்று பெயர் அல்ல. அப்படி செய்பவர்களுக்கு என்ன பெயர் என்று படிப்பவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

இப்படி ஏற்கனவே பல இடங்களில் நீங்கள் சேற்றை அள்ளி வீசியிருக்கிறீர்கள், அதில் ஒவ்வொன்றாக வருகிறேன். உங்களது காழ்ப்புணர்ச்சியுடன் தொடுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் உங்களிடம் கேட்க உள்ளேன். இதற்கு முன்பாக நான் எனது 'நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று' தலைப்பில் கேட்ட கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் இல்லை. என்ன காரணம்? இது போன்ற விஷயங்களை எழுதும்போது ஆதாரங்களை வைத்துக் கொண்டு எழுதுவதுதானே சிறந்தது, அல்லது எதை வேண்டுமானலும் எழுதலாம் என்று எழுதுகிறீர்களா? விவாதம் தேவையா என்றவுடன் வீரியம் கொண்டு எழுதும் அளவிற்கு திறமை கொண்ட உங்களுக்கு ஆதாரம் கொடுப்பதற்க்கு இத்தனை காலம் ஏன்? காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் விவாதங்கள் வரும்போது இதை சாவகாசமாக மறந்துவிடாலம் என்ற காரணத்தாலா? நான் இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார்த்தைகளை கொட்டிவிட்டு அதை நியாயப்படுத்துவது என்பதைவிட யோசித்து செயல்படுவதே சிறந்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அய்யா! இஸ்லாத்தின் உண்மையான முகத்தைப் பார்க்க பயம் என்று எழுதியிருக்கிறீர்கள், இன்னும் சகதியில் புழுத்துக் கிடக்கும் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இஸ்லாம் என்ற கண்ணாடியில் உங்களின் முகத்தைப் பார்க்க நீங்கள் பயப்படுகிறீர்கள். இஸ்லாம் என்ற உரை கல்லில் உங்களின் கொள்கைகளை உரசிப் பார்க்க பயம். இஸ்லாம் வெறும் இறை வணக்க முறைகளை மட்டும் உபதேசித்தால் உங்களுக்கு இந்த பயம் வராது. இஸ்லாம் வாழ்க்கை முறையையும் பேசுவதால்தான் உங்களுக்கு இந்த பயம். இதுநாள் வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை சரியா தவறா என்ற கேள்வியை கேட்க வைக்குமே என்ற பயம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உண்மையை உரசிப் பார்க்க பயம்.

இஸ்லாத்தைப் பற்றி நமக்கு நாமெ கற்பித்துக் கொண்ட அந்த உருவகங்கள் உடைந்துபோகும் என்று எழுதியிருக்கிறீர்கள். யாரய்யா அப்படி உங்களுக்கு நீங்களே உருவகங்களை கற்பித்துக் கொள்ளச் சொன்னது? எங்கிருந்து வந்தது அந்த அழகிய உருவகங்கள்? வாளாலும், வன்முறையாலும் வளர்ந்த மதம் என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் உங்களின் உள்ளங்களில் எப்படி இஸ்லாத்தைப் பற்றிய அழகிய உருவகங்கள் உருவானது?

விவாதங்கள் தேவைதான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படி இருந்த்தால் தான் வளர்ச்சி இருக்கும். நானும் அபூ முஹை மட்டும் விவாதிக்கொண்டால் போதாது. நானும் நீங்களும் விவாதிக்க வேண்டும், ஒரு குப்புசாமியும் குத்புதீனும் விவாதிக்க வேண்டும். இந்திய ஆயுர்வேத மருத்துவத்தையும் இன்னும் சமஸ்கிருத காவியங்களையும் கி.பி. 1200 களில் சிரமப்பட்டு அரபியில் மொழியாக்கம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு அது சாத்தியமானது அவர்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டதால்தான். யுனானி மருத்துவ முறையயும் சித்த வைத்திய முறையும் சங்கமித்தது அரேபிய மண்ணில்தான்.

நேசகுமாரின் விரிவான விவாதங்களுக்கு காத்திருப்பதோடு எனது முந்தைய கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று விடை பெறுகிறேன்.

No comments: